Pages

Sunday, April 22, 2012

தம்புள்ளை பள்ளி விவகாரம்- சில ஆலோசனைக் குறிப்புகள் அஷ்-ஷெய்க் அஸ்மின் அய்யூப் (நளீமி)

தம்புள்ளையில் முஸ்லிம் பள்ளிவாயல் தீவிர பௌத்த மதகுருமார்களினால் சிதைக்கப்பட்டு தொடர்ந்தும் அவ்விடத்தில் இஸ்லாமிய வணக்கஸ்த்தலம் ஒன்று அமையப் பெறுவது சாத்தியமற்ற நிலை உருவாகியிருக்கின்றது. இவ்விடயத்தில் இலங்கை முஸ்லிம் உம்மத் மிகவும் நிதானமான அமைப்பில் முடிவுகளை மேற்கொள்ள வேண்டிய கடப்பாட்டுடன் இருக்கின்றது. அந்தவகையில் பின்வரும் விடயங்களில் நாம் கவனம் செலுத்துவது பொறுத்தமானது.
அடிப்படைத் தகவல்கள்
தம்புள்ளைப் பிரதேசத்தில் குறித்த மஸ்ஜித் 60வருடங்களுக்கும் அதிகமாக வணக்கஸ்தலமாக அமையப் பெற்றிருக்கின்றது. 2009ம் ஆண்டுமுதல் அது வக்ப் சபையில் பதிவு செய்யப்பட்ட வணக்கஸ்தலமாகவும் அமைந்துள்ளது. தம்புள்ளை நகரில் வாழும் 500க்கும் அதிகமான முஸ்லிம்களுக்கான ஒரே வணக்கஸ்தலமாக இது அமைந்திருக்கின்றது. தம்புள்ளை நகரின் ஒரு பகுதியில் அமைந்துள்ள பல நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்த குகை ஓவியங்களும், பௌத்த, இந்து ஆலயங்களும் கலாசார முக்கோணப் பிரதேசமானக யுனெஸ்கோவினால் அடையாளப்படுத்தப்பட்டு, ரஷ்ய அரசின் உதவியோடு 2005ம் ஆண்டுமுதல் நிதியீட்டப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றது. இதனை பௌத்தர்கள் புனிதப் பிரதேசமாக கருதுகின்றார்கள். இது இவ்வாறு இருக்க; ரங்கிரி பௌத்த அமைப்பு தம்புள்ளையில் சட்டவிரோதமாக அமையப்பெற்றுள்ள கட்டிடங்களை அகற்றுவதற்கு அரசுக்கு அழுத்தக்கொடுக்கும் முயற்சிகளை மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகின.

“ரங்கிரி” என்பது தம்புள்ளையின் புராதனப் பெயர்களுள் ஒன்றாகும், ரங்கிரி பௌத்த அமைப்பு தம்புள்ளையில் சட்டவிரோதமாக அமையப்பெற்றுள்ள கட்டிடங்களை அகற்றுதல் என்ற பெயரில் பிற மதங்களின் வணக்கஸ்தலங்களை குறிவைத்துள்ளனர். இங்கே குறித்த அமைப்பினர் தம்புள்ளையில் அமையப்பெற்றுள்ள பள்ளிவாயலானது சட்டவிரோத கட்டிடம் என்றும், மஸ்ஜித் ஹைரிய்யா பள்ளிவாயல் தம்புள்ளை புனித பூமியின் சூழலைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது என்றும் தெரிவித்து பௌத்த பிக்குகளின் தலைமையில் பள்ளிவாயல் கட்டிடடத்தை 20 ஏப்ரல் 2012 அன்று சேதப்படுத்தப்படுத்தினர்.

இதில் நேரடியாக தலையிட்ட பொலிஸ் மற்றும் சிவில் நிர்வாக சேவை அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி எதிர்வரும் ஏப்ரல் 23ம் திகதி இதற்கான தீர்வொன்றினைப் பெற்றுத்தருவதாக அறிவித்தனர். இதனை ஆர்ப்பட்டக்காரர்கள் தம்புள்ளை பள்ளிவாயல் 23ம் திகதி உத்தியோகபூர்வமாக குறித்த பிரதேசத்தில் இருந்து அப்புறப்படுத்தப்படவேண்டும் அவ்வாறு செய்யப்படாவிட்டால் 24ம் நாள் அதனை நாம் இடித்து தரைமட்டமாக்குவோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இதனை எதிர்கொள்ளும் விதமாக முஸ்லிம் சமூகம் (21-04-2012) ஜம் இய்யதுல் உலமாவின் தலைமையில் ஒன்றுகூடி ஒரு சில தீர்மானங்களை மேற்கொண்டுள்ளனர். இதனை முஸ்லிம் சமூகத்தின் தீர்மானங்கள் எனவும் கூறலாம்.
குறித்த தீர்மானங்களை சுருக்கமாக நோக்கின் 
• அதே இடத்தில் பள்ளிவாசல் மீண்டும் நிர்மாணிக்கப்பட வேண்டும்
• மாற்றுக் காணியில் பள்ளிவாசலை அமைக்க முன்வைக்கப்பட்டுள்ள ஆலோசனை திட்டவட்டமாக நிராகரிக்கப்பட வேண்டும்
• நாளை மறுநாள் திங்கட்கிழமை தம்புள்ளை பிரதேச செயலகத்தில் இது தொடர்பாக இடம்பெறவுள்ளதாக கூறப்படும் கூட்டத்தை பகிஷ்கரிக்க வேண்டும்.
• முஸ்லிம்களது பள்ளிவாசல்களும் புனித தலங்களும் உரிய முறையில் பாதுகாக்கப்பட வேண்டும்.
• அத்துடன் எதிர்காலத்தில் இவ்வாறான சதி நடவடிக்கைகள் இடம்பெறாத வண்ணம் போதிய முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
• மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இது தொடர்பாக எடுத்த சாதகமான நடவடிக்கைகளுக்கு இங்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
• தேசிய சர்வதேசிய ஊடகங்களில் குறித்த விடயம் இடம்பெற்றதைத் தொடர்ந்து தேசிய சர்வதேசிய அழுத்தம் ஏற்படுத்தப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அதேவேளை இன்று (22 ஏப்ரல் 2012) குறித்த முஸ்லிம் பள்ளிவாசலை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுப்பதாக இலங்கையின் பிரதமர் டி.எம் ஜயரத்ன அறிவித்துள்ளதாக அறிக்கையொன்று வெளியாகியுள்ளது. உடனடியாக அமுலுக்கு வரும் விதத்தில், குறித்த பகுதியிலிருந்து பள்ளிவாசலை அப்புறப்படுத்தி, அதனை வேறொரு பொருத்தமான இடத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ஜயரத்ன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் அலுவலக முத்திரையுடன் வெளியாகியுள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டபட்டுள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மூத்த அமைச்சரான ஏ.எச்.எம். பௌசி, மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா மற்றும் துணை அமைச்சர்களான அப்துல்காதர், ஹிஸ்புல்லா ஆகியோரும் இஸ்லாமிய மதத்தலைவர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரதமர் அலுவலகத்திலிருந்து இப்படியான அறிக்கையொன்று வெளியாகியிருக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் பெளசி ஊடகங்களுக்கு கூறியுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு கூட்டம் எதுவும் நடக்கவில்லை என்றும் அப்படியான கூட்டத்தில் தானோ மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவோ கலந்துகொள்ளவும் இல்லை என்றும் அமைச்சர் பௌசி சுட்டிக்காட்டியுள்ளார்.பல பரம்பரைகளாக தம்புள்ளை நகரில் முஸ்லிம் மக்கள் சென்று வழிபட்டுவரும் பள்ளிவாசலை அகற்றுமாறு கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறாக குறித்த விவகாரத்தில் பல்வேறு செய்திகளும் ஊடக அறிக்கைகளும் உலா வர்ரும் இந்நிலையில் இப்பிரச்சினையினை ஒரு இலங்கை முஸ்லிமின் அணுகுமுறை குறித்து இங்கு நோக்குவோம்.

பௌத்த மதகுருமாரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட குறித்த நிகழ்வானது மிக முதன்மையாக இது ஒரு அடிப்படை மனித உரிமை மீறல் நிகழ்வாகும்

சர்வதேசிய ரீதியில் ஐக்கிய நாடுகள் சபையினால் மனித உரிமைகள் சாசனம் என அடையாளப்படுத்தப்பட்ட 18 அடிப்படை மனித உரிமைகளுள் ஏழாவதாக டையாளப்படுத்தப் பட்டுள்ள சமயச் சுதந்திரம் பின்வருமாறு வியாக்கியானப்படுத்தப்படுகின்றது. 

சமயச் சுதந்திரம் என்பது தனி நபர்கள் அல்லது குமுகங்கள் எந்த ஒரு சமயம் தொடர்பாக நம்பிக்கைகளை வைத்திருப்பதற்கு, வழிபடுவதற்கு, சடங்குகளை நடத்துவதற்கு ஆன சுதந்திரம் ஆகும். இது எந்த ஒரு சமயம் அல்லது இறைவன் தொடர்பாக நம்பிக்கையை வைத்திருக்காமல் இருப்பதற்குமான சுதந்திரமும் ஆகும்.

இந்த அடிப்படையில் சர்வதேசிய ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமை இங்கே மீறப்பட்டுள்ளது மாத்திரமின்றி அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக பௌத்த மதகுருமாரின் தலைமையில் தம்புள்ளையில் மேற்கொள்ளப்பட்ட நட்டவடிக்கையானது இலங்கையின் சட்டயாப்பை மீறும் நிகழ்வாகும்

இலங்கை சனநாயக சோசலிஸக் குடியரசின் யாப்பின் 10,11, 15 ம் ஷரத்துகளை மீறும் செயற்பாடாகும். அதாவது 10ம் சரத்து மத சுதந்திரம் குறித்துப் பேசுகின்றது. 11ம் ஷரத்து நிந்தனைகளில் இருந்து பாதுகாத்தல் குறித்துப்பேசுகின்றது, 15ம் ஷரத்து அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாத்தல் குறித்துப் பேசுகின்றது. இங்கே பௌத்த மதகுருமார் மேற்படி மூன்று ஷரத்துகளையும் அவமதித்துள்ளனர்.

குறித்த இவ்விரு அடிப்படைகளிலுமே மேற்படி விடயம் அணுகப்படவேண்டும், அதனை விடுத்து மேற்படி விடயத்தை இனவாத எண்ணங்களுடனும், சிறுபான்மை பெறும்பான்மை எண்ணங்களுடன் அணுக முற்படும்போது வீணான சர்ச்சைகளும் பிணக்குகளும் ஏற்படுமே தவிர நாம் இந்த நாட்டில் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுவதையும், இந்த நாட்டில் சட்டரீதியான ஆட்சி நிலை நாட்டப்படுவதையும் உறுதி செய்வது சாத்தியமற்றுப்போய்விடும்.

குறித்த விடயத்தை மேற்படி இரு கோணங்களிலும் அணுகி இந்த நாட்டில் பெரும்பான்மை சமூக மதத்தலைவர்களின் ஆதரவையும் ஏனைய சமூகங்களின் ஆதரவையும் பெற்று நீதியான தீர்வொன்றினை நாம் பெற்றுக்கொள்ள முனைய வேண்டும். 

பள்ளிவாயலை குறித்த இடத்தில் நிர்மானித்தல் என்ற பேச்சு இப்போது அவசியமற்றது, ஏனெனில் பள்ளிவாயல் குறித்த இடத்திலேயே அமைக்கப்படவேண்டும் என்பதில் இருகருத்துகள் கிடையாது, எமது முதன்மையான கடமை குறித்த தீவிர எண்ணங்கொண்ட மதகுருமார்களுக்கு அவர்கள் இழைக்கும் தவறையும், காட்டும் மிகமோசமான வழிமுறைகளையும் தவறு என்றும், மனித நேயத்துக்கும், மனிதாபிமானத்துக்கும், அமைதிக்கும், இந்த நாட்டின் நிலையான சமாதானத்திற்கும் பங்கம் விளைவிக்கக் கூடியது என்றும் உணர்த்தவேண்டிய தேவை இருக்கின்றது.

இதனை மனிதாபிமான, சட்டரீதியான விடயம் என்ற கண்ணோக்கில் அணுகவேண்டும், அத்துடன் தேசிய சர்வதேசிய மட்ட அழுத்தங்களை குறித்த தீவிரப்போகுடையோர்க்கும், அதற்கு பின்னணியிலும் முன்னணியிலும் இருப்போர் மீதும் ஏற்படுத்த வேண்டும். இதனை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பும் கடமையும் முஸ்லிம்களுக்கு இருக்கின்றது. இதனை சாதிப்பதுதான் இவ்வாறான பிரச்சினைகள் ஆங்காங்கே தோன்றாமல் இருக்க வழிசெய்யுமே தவிர, பள்ளிவாயலை மீண்டும் கட்டுவதில் ஆர்வம் காட்டுவது நிலைமைகளை தற்காலிகமாகத் தீர்க்கவே வழி செய்யும்.

எமது ஊடகங்களில் எம்மவர்கள் மிகவும் உணர்ச்சிவயப்பட்டு, கொந்தளித்து வார்த்தைகளை அள்ளிவீசுகின்றார்கள், ஜெனீவாவில் நாம் இலங்கை அரசைக் காப்பாற்றினோம் இப்போது இலங்கை அரசு நன்றிகெட்டதனமாக நடக்கின்றது என்றும், முஸ்லிம் அரசியல்வாதிகளை விமர்சித்தும் எழுதத் தவறவில்லை உண்மையில் இவை ஆரோக்கியமற்ற கருத்தாடல்களாகும். சிந்திப்போம் ஒரு “ நல்ல மாற்றம் நோக்கி நகர்வோம்”

No comments:

Post a Comment